Friday, June 10, 2011

எப்படியும் ஒருநாள் எம் முற்றம் மிதிப்போம்தானே!




இருவது வருஷம் ஆச்சு...
இருநூறு வசந்தம் போச்சு...

குண்டுபோட்டு கலைத்தனர் - வந்து
கூரை குலைத்து போயினர்
கல்லை மட்டு விட்டதனால் - வெறும்
கட்டிடமாய் நிண்டு கொண்டு - என்னிடம்
இன்று நீ என்ன தான் கேட்கிறாய்?
இத்தனை நாளாய் நாம் எங்கிருந்தோம் என்றா?

அங்க...
ஆக்கிரமித்தவன் நின்டிருப்பான்,
அவன் கூலிக்காரன் வந்திருப்பான்
வேறுசிலர் கண்டிருப்பாய் - அவர்கள்
வேவுபாக்க நுழைந்திருப்பர் - நமக்காய்
போராட துணிந்தவர்கள்,
படைகள் பல அமைத்தவர்கள்
உயர் பாதுகாப்பிலும்
ஊடுருவ துணிந்தவங்கள்
இவர் எல்லாம் இருந்தும் நானோ...
போராளி ஆகவில்லை
போர்க்களம் ஒன்றும் போகவில்லை

ஊர் ஊராய் ஓடி,
உணவு, உடுப்பு...
அது கிடக்க - அல்லது
அது கிடைக்க,
படிப்பு படிப்பு என்று அலைந்து,
பல்கலைக்கழகம் சென்று, பட்டமும் பெற்று,
பட்டமளிப்பு விழாவுக்கு, பட்டாளத்துடன் போய்
படம் எடுத்து, பெரிசாக்கி - அதுக்கும் சட்டம் போட்டு - கடைசீல
அதை மாட்ட சுவரில்லை
அன்றரிந்தேன் உன்னிலையை.
நீ மட்டும் இல்லை - நானும்
வெறும் கட்டிடம் தானென்று.

அன்று...
நிமிர்ந்து நீ நிக்க, - உன்
நினைவாக எடுத்த படம்
கடைசிமட்டு இருந்ததுதான் - அதுவும்
கடைசி போரில் கைவிட்டு போனதல்லே

உயிர் பயத்தில் நான் இங்கு
உயர் பாதுகாப்பில் நீ அங்கு - அன்று
நிழலுக்காய் நட்டமரம் வேர்விட்டு - இன்று உன்னை
நிலைகுலைக்க போகுதாம்
அந்நிய நாட்டவர் எல்லாம்
அவனோட சேந்து, நாடகம் போட்டு,
அத்தனையும் அளித்துவிட்டு
நடைபிணமாய் எம்மை எல்லாம்
நாட்டை விட்டே துரத்திவிட்டு
எங்கள் சொந்த வீட்டை பாக்க
எமக்கே அனுமதிகுடுக்க
அண்ணாவும், தங்கையும் அத்தானும் - உன்னை
ஆசையா பாக்கவந்து
அத்தனையும் சொன்னார்கள்.
உனக்கு மட்டுமல்ல, உலகத்துக்கும் உதேநிலைதான்

இத்தனை கடந்தும்
இன்றைக்கும் சொல்கிறேன் நான்
எப்படியும் ஒருநாள் எம் முற்றம் மிதிப்போம்தானே!